
என்னுடைய அழைப்பை ஏற்று இலட்சக்கணக்கில் திரண்டு வந்திருக்கும் உங்களுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் நெருங்குகிற சூழலில் எல்லாக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால் நாமோ தமிழர்க்கு இறையாண்மை வேண்டுமென்று கடந்த ஆறு மாத காலமாக தமிழகமெங்கும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து இந்த மாபெரும் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த மாநாட்டைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். தனித்தமிழ்நாடு வேண்டுமென்று கோருகிற மாநாடாக விடுதலைச் சிறுத்தைகள் நடத்துகிறார்கள் என்று சிலர் கருத்துப் பரப்பி உள்ளனர். எப்படியாவது தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டுமென்பதும், விடுதலைச் சிறுத்தைகளைத் தனிமைப்படுத்த வேண்டுமென்பதும் சிலருடைய விருப்பமாக இருக்கிறது. அதனால் இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கத்தைத் திசைதிருப்புகிற வகையில் இவ்வாறு வதந்திகளைக் கிளப்பியுள்ளனர். நாங்கள் தனித் தமிழ்நாடு கோரவில்லை. ஆனால் அவ்வாறு கோருவதற்கு காரணங்களும் தேவைகளும் இருப்பதை மட்டும் நான் சுட்டிக்காட்டுகிறேன். திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டபோது, பேரறிஞர் அண்ணா அவர்கள், ""கோரிக்கையை நாங்கள் கைவிட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன'' என்று கூறினார். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் தனித்தமிழ்நாடு கோரிக்கையை வைக்கவுமில்லை, கோரிக்கையை கைவிடவுமில்லை. கோருவதற்கான காரணங்கள் இருக்கின்றன என்பதையே சுட்டிக்காட்டுகிறோம்.
இந்த உலகில் தமிழருக்கு ஒரு நாடு வேண்டுமென்றும், அது தமிழீழமாக மலர வேண்டும் என்றும், அதனைச் சர்வதேசச் சமூகம் அங்கீகரிக்க வேண்டுமென்றும் கோருவதே இம்மாநாட்டின் முதன்மையான நோக்கம். ஈழத் தமிழர்கள் வாழும் வடகிழக்கு மாநிலங்கள் அவர்களது பூர்வீகத் தாயகமாகும். அதனை அங்கீகரிக்க வேண்டுமென்பதே ஈழத் தமிழர்களின் கோரிக்கை. அதன் அடிப்படையில்தான் தாயகம், தேசியம், தன்னாட்சி என்கிற கொள்கை முழக்கங்களை விடுதலைப் புலிகள் முன்வைத்தனர். தொடர்ந்து அதனை உலகம் தழுவிய அளவில் முன்னெடுத்துச் செல்வது ஒவ்வொரு தமிழரின் கடமை என்று விடுதலைச் சிறுத்தைகள் உணருகிறது. அதன் வெளிப்பாடாகவே இம்மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கிறோம்
0 comments:
Post a Comment